வெஸ்ட் நைல் காய்ச்சலால் உயிரிழந்த நோயாளி வசித்து வந்த கண்ணாரா பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியதுடன், மாநிலம் முழுவது உஷார் படுத்தியுள்ளது. கேரளாவின் திருச்சூர் மாவட்டம் பனஞ்சேரியை சேர்ந்த ஜோபி என்பவர் மேற்கு நைல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து மாநில சுகாதாரத்துறை உஷார்படுத்தப் பட்டுள்ளது. மேற்கு நைல் காய்ச்சல், க்யூலெக்ஸ் வகை கொசுக்களால் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
திருச்சூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வெஸ்ட் நைல் காய்ச்சலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. அதேநேரம் தற்காப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், கொசுக்களை அழிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், தண்ணீர் தேங்க விடக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார். காய்ச்சல் அல்லது நோயின் பிற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பொதுமக்கள் மருத்துவமனையில் செல்லவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.