கேரளாவில் 2 பேருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு தொற்றுநோய். இதனை வயிற்று காய்ச்சல், குளிர் கால வாந்தி காய்ச்சல் என்றும் குறிப்பிடுவார்கள். இது அசுத்தமான உணவு, நீர் மற்றும் நிலப்பரப்புகள் மூலம் பரவக்கூடியது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை மந்திரி கூறுகையில், கேரளாவில் விழிஞ்சம் பகுதியில் இரண்டு குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.
அந்தப் பகுதியில் சுகாதாரத்துறை நிலைமையை ஆய்வு செய்து வருகின்றது. அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் அனைவரிடமும் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளின் உடல்நிலை சீராக உள்ளது. இதன் முக்கிய அறிகுறிகள் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்றுவலி என்று கேரளாவில் உள்ள மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.