பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘ராம் லீலா’, ‘பத்மாவத்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி, தயாரித்திருக்கிறார். இவரது படங்களின் திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு ஆகியவை பலராலும் பாராட்டப்பட்டது. சில நேரம் சர்ச்சைகளிலும் சிக்கியது. இவரது ‘பத்மாவத்’ திரைப்படம் ராஜபுத்திரர்களை அவமானப்படுத்தும் வண்ணம் இருந்ததாக ராஜ்புட் இன மக்கள் இப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி பல இடங்களில் போராட்டம் நடத்தினர். இருந்தும் சில மாற்றங்களுக்கு பின்னர் படம் வெளியாகி பலராலும் பாராட்டப்பட்டது.
இதை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி கதாநாயகி ஆலியா பட்டை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை பன்சாலி இயக்கப்போவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு ‘கங்குபாய் கத்தியவாடி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்தை பன்சாலியுடன் சேர்ந்து ஜெயந்திலால் கடாவும் தயாரிக்கின்றனர். அடுத்த வருடம் செப்டம்பர் 11ஆம் தேதி இப்படம் வெளியிடப்படுவதாக கூறப்படுகிறது. ஹுசைன் ஜைடியால்ட் எனும் எழுத்தாளரின் ‘மாஃபியா குயின்ஸ் ஆப் மும்பை’ எனும் நாவலின் ஒரு அத்தியாயத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.