சமீப நாட்களாக ஏலியன் குறித்த பேச்சுக்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இந்த பேச்சு இப்போது மட்டுமல்ல, பல ஆண்டுகளாகவே தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. பொதுவாக ஏலியன்கள் அறிவியலிலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும் மனிதர்களைக் காட்டிலும் வளர்ச்சி மிக்கவர்களாக இருப்பார்கள் என்பது கதைகளிலும், திரைப்படங்களிலும் நாம் கண்டும் கேட்டும் வந்துள்ளோம். பெரும்பாலும் அமெரிக்க திரைப்படங்களில் ஏலியன் குறித்த கதைகள் அதிகம் வலம் வந்து கொண்டிருக்கும்.
இந்நிலையில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மூத்த விண்வெளி ஆய்வாளர் ஒருவர், அமெரிக்காவுக்கும் ஏலியன்களுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் இருந்துள்ளதாகவும், டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கும் இது குறித்து தெரியும் எனவும் சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். இதை மையமாகக் கொண்டு மேற்கொண்ட ஆய்வில், நாசா மற்றும் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் ஏற்கனவே ஏலியன் குறித்து குறிப்பிட்டிருந்த கூற்றுக்களை உள்ளடக்கி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
நமது பால்வெளி அண்டத்தில் லட்சக் கணக்கான உயிரினங்கள் உயிர் வாழ்கின்றன. அப்படியான உயிரினங்களில், சில இனங்கள் நாகரிகம் பெற்று அதீத அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியை அடையும் பட்சத்தில் அது தன் இனத்தையே தன்னைத் தானே அழித்துக் கொள்ள காரணமாக இருக்கும் என நாசாவும், கலிபோர்னியா தொழில்நுட்ப பல்கலைக் கழகமும் தெரிவித்திருந்தது. இதன்படி பார்க்கையில்,
அறிவியலிலும், தொழில் நுட்பத்திலும் வளர்ச்சி அடைந்து காணப்படும் ஏலியன்கள் நமது அண்டத்தில் இருந்து ஏற்கனவே அழிந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மனித இனத்திலும், அதீத தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் நிலையில், அழிவை சந்திக்கக்கூடிய உச்சத்திற்கு மனிதர்கள் இன்னும் வரவில்லை எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல இயற்கைக்கு எதிராக இருக்கக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு கட்டத்தில் அளவை மீறினால், பேரழிவு நிச்சயம் என்பதற்கான அறிகுறிகளை இப்போதுள்ள காலகட்டத்திலேயே இயற்கை நமக்கு அவ்வப்போது உணர்த்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.