10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளன என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தகவல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது. அதன்படி ஜூன் 15ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 25ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்ட்டுள்ளது.
இதனையடுத்து தேர்வு நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 5 இணை இயக்குனர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஜூன் 15 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியை மேற்பார்வையிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளன என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தகவல் அளித்துள்ளார். பள்ளிகளில் செயல்பட்ட கொரோனா முகாம்கள் அருகாமையில் உள்ள சமூக நலக் கூடங்களுக்கு மாற்றம் செய்யபட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டு உள்ள ஆசிரியர்களுக்கு முகக்கவசங்கள் தயார் நிலையில் உள்ளது. இதுவரை சுமார் 60,000 முக கவசங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.