Categories
மாநில செய்திகள்

இன்று மாலைக்குள் அனைத்து பள்ளிகளும் சுத்தம் செய்யப்பட வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? இல்லையா? என்பது குறித்து எந்த விதமான முடிவுக்கும் தமிழக அரசு வரவில்லை. இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் பழனிசாமியுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

ஒருவேளை அரசு தேர்வுகளை நடத்த உத்தரவிட்டால் தேர்வுகளை முறையாக நடத்த பள்ளி தலைமை தயாராக இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இன்று மாலைக்குள் அனைத்து பள்ளிகளும் சுத்தம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ” அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் தேர்வு மையங்களாக செயல்பட உள்ளன.

இதனால் பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. தூய்மை பணிகளை கல்வித்துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது. சானிடைசர், சோப், கை கழுவுவதற்கான நீர் ஆகிய வசதிகளை ஏற்படுத்தி வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் அனைத்து பள்ளி ஆசிரியர்களும் (20ம் தேதி) நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டும். மேலும் பள்ளி ஆசிரியர்களுக்கு இனி விடுமுறை கிடையாது. அதேபோல மாணவர்களை தொடர்பு கொண்டு, தேர்வு கால அவனை குறித்து ஆசிரியர்கள் விளக்க வேண்டும். மாணவர்கள் தேர்வு எழுதும்போது முகக்கவசங்களை அணிந்து தான் தேர்வு எழுத வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |