ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழ்நாடு மீன் வளத்துறை நடத்தும் மீன் உணவுத் திருவிழாவில், உணவுகளை ருசி பார்க்க அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். அம்மாதம் முடிவடைந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் அசைவு பிரியர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது மீன் உணவு திருவிழா. சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த திருவிழா தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது. பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு மீன்வளத்துறை நடத்தும் இந்த விழாவில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
மீன் உணவுத் திருவிழா என்றவுடன் மீன் உணவுகள் மட்டும் தான் கிடைக்கும் என்று உள்ளே செல்லும் வாடிக்கையாளர்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. மீன் இறைச்சிகளுடன் பல்வேறு உணவு வகைகளும் வழங்கப்படுகிறது. விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வஞ்சிரம், எரா, சீலா, மத்தி உள்ளிட்ட அனைத்து வகையான மீன்களும் அதனுடன் கடல் நண்டுகள் முதல் நத்தை இறைச்சி வரையிலான சூப்புகளும், வறுவல்களும் அசைவ பிரியர்களை எச்சில் சொட்ட வைக்கிறது.
மேலும் ராகிக்களி கருவாட்டுக் குழம்பு, மீன் வறுவல், மீன் சுக்கா, மீன் அவியல், மீன்கறி பிரியாணி, நாட்டுக்கோழி வறுவல் என அனைவரின் விருப்பங்களுக்கேற்ப உணவு வகைகள் சுடச் சுட சமைத்துப் பரிமாறப்படுகிறது. இந்த பிறப்பே ருசித்து சாப்பிடத்தானே என்று எங்கேயோ கேட்ட பாடல் வரிகள் உணவுத் திருவிழா பார்வையாளர்களுக்கு பொருத்தமாய் உள்ளது. அசைவ உணவுப் பிரியர்களை சுண்டி இழுக்கும் இந்த மீன் உணவுத் திருவிழாவை இன்னும் சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.