ராமநாதபுரத்தில் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவர் உட்பட அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நேருநகர் 6-வது தெருவில் தர்ஷினி(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு தர்ஷினிக்கும் சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களின் திருமணத்தின் போது 60 பவுன் நகை மற்றும் 5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் வழங்கியுள்ளனர். ஆனாலும் திருமணமான சில மாதங்களிலேயே புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என 30 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு கார்த்திகேயன் அவரது பெற்றோர் மற்றும் சகோதரி கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையில் தர்ஷினிக்கு குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும் கார்த்திகேயன் குழந்தையை பார்க்க வராமலும் சேர்ந்து வாழவும் மறுத்துள்ளார். இதனால் தர்ஷினி ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கார்த்திகேயன் அவரது தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.