தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் இயங்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது கடந்த 7 மற்றும் 8ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு போட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எதிர்க்கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்போடு நின்று விடாமல் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் அறிவித்தன. அதிமுகவே எதிர்பார்க்காத வகையில் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிகாவும் அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு:
தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உய்ரநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறப்பதால் பல குடிமகன்கள் மாநிலம் விட்டு மாநிலம் மது வாங்கச் செல்கிறார்கள். இது சட்டஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே இங்கு மதுக்கடைகளை திறக்கின்றோம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பல்வேறு நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது.
களமிறங்கிய மக்கள் நீதி மய்யம்:
கடந்த 7ஆம் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டன. 44 நாட்களுக்கு பின் கடைகள் திறக்கப்பட்டதால் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனையடுத்து 8ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் மதுக்கடைகளில் சமூக விலகல் கடைபிடிக்கவில்லை, நீதிமன்ற நிபந்தனை மீறப்பட்டுள்ளது என்றும், டாஸ்மாக் கடையால் கொரோனா பரவக்கூடும் எனவே அதனை மூட உத்தரவிட வேண்டும் என்று மனுதாக்கல் செய்த்தது.
மதுக்கடையை மூட உத்தரவு:
மேலும் டாஸ்மாக் கடையில் உயர்நீதிமன்ற நிபந்தனைகள் மீறப்பட்டதற்கான ஆதாரங்களும் அடுக்கப்பட்டன. இதனை ஆராய்ந்த நீதிபதிகள் பொது முடக்கம் முடியும் வரை மதுக்கடைகளை திறக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பல அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்தனர். மேலும் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தினார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன.
மேல்முறையீடு:
டாஸ்மாக் மதுக்கடை வருவாய் தமிழக அரசின் பெரும் நிதி வருவாயாக இருக்கின்றது. இதனால் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தலையில் விழுந்த இடியாகவே இருந்தது. இதனால் கூட்டணியில் உள்ள கட்சிகளே டாஸ்மாக் மதுக்கடைகளை எதிர்த்தும் கூட தமிழக அரசு திறந்தது. அதே போல கூட்டணி கட்சிகளின் வலியுறுத்தலை மீறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
சிக்கலில் அரசு:
பாஜக, பாமக, தேமுதிக என கூட்டணி கட்சிகளே எதிர்த்தும் தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ளதால் இதன் தீர்ப்பை அரசுக்கு சாதகமாக வாங்கி விட வேண்டும் என்ற கட்டாயமான சூழல் எழுந்தது. கூட்டணி கட்சிகளின் பேச்சை மீறி மேல்முறையீடு சென்று தோல்வி அடைந்தால் அரசுக்கு பெருத்த அவமானமாக போய்விடும் என்பதால், உச்சநீதிமன்றத்தில் முக்கிய வாதங்களை எடுத்து வைத்து டாஸ்மாக் மதுக்கடையை திறக்க உத்தரவு வாங்கி விட வேண்டும் என தமிழக அரசு இந்த வழக்கை கையாண்டது.
முக்கிய வாதங்கள்:
இந்த நிலையில் தான் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும் முக்கிய வாதங்களை முன் வைத்தது. மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவால் தமிழக அரசு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. இது அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது போன்ற வாதங்களை முன்வைக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றமும் தமிழக அரசுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்தது. இதனால் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட இருக்கின்றது.
சாதித்த எடப்பாடி:
மதுக்கடைக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்திய நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. அதிமுக கூட்டணியில் உள்ள கட்சியான பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் மதுக்கடையை திறக்க அனுமதியை பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமி தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்து சாதித்து காட்டி விட்டார்.