சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூரில் இன்று மட்டும் பிற்பகல் 3 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி சென்னை, கோவை, மதுரையில் நாளை காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தவும், சேலம், திருப்பூரில் நாளை காலை முதல் 28ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு என்றும் கூறியுள்ளார்.
முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகளுக்கும், தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் உணவுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் என அறிவித்த முதல்வர் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பை தர முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 5 மாநகராட்சிகள் தவிர மற்ற மாநகராட்சிகளில் வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மாநகராட்சிகளில் இன்று பிற்பகல் 3 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூரில் இன்று மட்டும் பிற்பகல் 3 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பொருட்கள் வாங்கும் போது பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முதல்வர் வேண்டுகொள் விடுத்துள்ளார்.