பனிப்பாறைகளில் சிக்கிய ஒருவர் கிட்டத்தட்ட 3 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டது அபூர்வமான விஷயமாகும் என்று மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
பிரெஞ்சு நாட்டிலுள்ள ஆல்ப்ஸ் மலையில் 50 வயதுடைய நபர் தன் குடும்பத்துடன் பனியின் மீது நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட பனிப்பாறை சரிவில் அவர் சிக்கி பணியில் புதைந்தார். அதன் பின் மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. முதற்கட்டமாக மோப்ப நாய்கள் விட்டு அவரை தேடும் பணி நடைபெற்றது. ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்த நிலையில் அவர் வைத்திருந்த செல்போன் எண்ணை டிராக் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவர் எங்கு உள்ளார் என்று கண்டறியப்பட்டது. அதன்பின் அவர் 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு பிறகு மீட்கப்பட்டார். இதுகுறித்து மீட்பு படையினர் தெரிவித்ததாவது, ஒருவர் பனிக்குள் புதைந்து 20 நிமிட தாண்டி மீட்கப்பட்டாலே உயிர் பிழைப்பது அபூர்வம். ஆனால் இவர் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வரை பனிக்குள் இருந்து உயிருடன் வெளிவந்திருப்பது மிகவும் அபூர்வமான விஷயமாகும் என்று தெரிவித்தனர்.
பனிப் பாறையில் சிக்கிய இவர் மரத்தில் சென்று மோதியதால் இழுத்துச் செல்லப்படாமல் அதே இடத்தில் அசையாமல் இருந்துள்ளார். இதனால் அவரது இடுப்பில் முறிவு ஏற்பட்டுள்ளது.ஆனால் அவர் முழுமையாக உடல்நலம் குணம் ஆகி விடுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.