பேருந்து மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்கு ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து நடைபெற உள்ள முழு அடைப்பை முன்னிட்டு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை தாங்கினார். மேலும் இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் நீலமேகம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், சி.ஐ.டி.யு. செயலாளர் ஜெயபால், துணைச் செயலாளர் செங்குட்டுவன், ஏ.ஐ.டி.யூ.சி. தலைவர் சேவையா, துணை செயலாளர் துரை. மதிவாணன், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், மாதர் சங்க நிர்வாகிகள் தமிழ்ச்செல்வி, விஜயலட்சுமி உட்பட பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.
அப்போது ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து மின்சார திருத்த மசோதா, சுற்றுச்சூழல் வரைவு மசோதா, தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பு, மீன் வள மசோதா, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்டவற்றை எதிர்த்து போராட்டம் நடைபெற இருக்கிறது. இதனால் இந்த மாவட்டத்திலும் பேருந்து மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.