பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர், ஷாகித் அப்ரிடி. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கிய இவர் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என 500க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் களமிறங்கி 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களையும், 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
நடியா என்ற பெண்ணை மணந்து கொண்ட அப்ரிடிக்கு, அக்ஷா, அன்சா, அஜ்வா, அஸ்மாரா என 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே தற்போது அப்ரிடி – நடியா தம்பதிக்கு ஐந்தாவது முறையாக மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்த அறிவிப்பை அப்ரிடி, தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் தனது பெண் குழந்தைகளுடன், தனக்குப் புதியதாக பிறந்த குழந்தையுடன் அப்ரிடி நிற்கிறார். மேலும், கடவுளின் அளவில்லா ஆசியும், கருணையும் என் மீது இருக்கிறது. ஏற்கெனவே எனக்கு நான்கு மகள்கள் உள்ள நிலையில், தற்போது ஐந்தாவதாக மீண்டும் ஒரு மகள் பிறந்திருக்கிறாள். இதை எனது நலம் விரும்பிகளுடன் பகிர்ந்து கொள்கிறேன் எனப் பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து உலகம் முழுதிலும் உள்ள அப்ரிடியின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற அப்ரிடி, அதன்பின் வெளிநாட்டு டி20, டி10 தொடர்களில் மட்டும் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/SAfridiOfficial/status/1228358607948984322