ஆப்பிரிக்காவில் இருக்கும் ஜிம்பாவேவில் கொரோனாவுடன் சேர்ந்து மலேரியாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது
சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று ஆப்பிரிக்கா நாடுகளில் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அல்ஜீரியா, ஜிம்பாவே, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் ஆப்பிரிக்கா நாடான ஜிம்பாவே மற்றொரு சிக்கலையும் சந்தித்து வருகிறது. கொரோனா தொற்றை எதிர்கொண்டு வரும் இந்த சூழலில் அந்நாட்டில் மலேரியா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மலேரியாவால் பாதிக்கப்பட்டு 200க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.
ஜிம்பாவே நாட்டு மக்கள் மலேரியாவிற்கும் கொரோனாவிற்கும் இடையில் சிக்கிக்கொண்டு செய்வதறியாது தவித்து வருகின்றனர். சென்ற வாரம் வரை அந்நாட்டில் கொரோனா பாதிப்பு பதிவாகாத நிலையில் தற்போது 25 பேர் பாதிக்கப்பட்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஜிம்பாவேவில் கொரோனா பரவுவதை தடுக்க மருத்துவ நிதி உதவிகளைக் கேட்டு அந்நாட்டு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதோடு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக இம்மாத இறுதிவரை அந்நாட்டில் லாக்டவுன் அறிவித்துள்ளனர்.