மனநலம் பாதிக்கப்பட்டவரை நான்கு சிறுவர்கள் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட கருப்பசாமியை அவரது சகோதரி வசந்தி மற்றும் தம்பி மாரி போன்றோர் பராமரித்து வந்துள்ளனர். இதனை அடுத்து வீட்டை விட்டு வெளியே சென்ற கருப்பசாமி நீண்ட நேரமாக திரும்பி வராததால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் தெருவில் 4 சிறுவர்கள் கத்தியுடன் நின்று கொண்டிருந்ததை பார்த்து கருப்பசாமியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த இடத்தில் கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் கருப்பசாமி சடலமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கருப்பசாமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் 14, 15, 16, 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதாவது கருப்பசாமியை இந்த நான்கு சிறுவர்களும் கிண்டல் செய்த போது கருப்பசாமி பதிலுக்கு அவர்களை திட்டியுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கோபமடைந்த சிறுவர்கள் கருப்பசாமியை கத்தியால் குத்தி கொலை செய்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.