கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தந்தையுடன் பட்டதாரி பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய பட்டதாரி பெண் அவரது தந்தையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது ஆய்வுக்காக வெளியே சென்ற கலெக்டர் ஸ்ரீதர் காரில் உள்ளே வந்து கொண்டிருக்கும் போது அவருக்கு முன்னால் சென்று அந்தப் பெண்ணும் அவரது தந்தையும் திடீரென கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கலெக்டரின் பாதுகாவலர் ஓடி சென்று அவர்கள் கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை வாங்கி உடலில் தண்ணீர் ஊற்றியுள்ளனர்.
இதனை அடுத்து அவர்களை விசாரணை செய்த போது அந்தப் பெண்ணிற்கும் எழுத்தூர் கிராமத்தில் வசிக்கும் நாகராஜ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஆசை வார்த்தைகள் கூறி பெண்ணிடம் நாகராஜ் உல்லாசமாக இருந்துவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததினால் மன உளைச்சலில் இருந்த அந்தப் பெண் தனது தந்தையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. இது குறித்து தகவலறிந்து வந்த அனைத்து மகளிர் காவல்துறையினர் அந்த பெண் மற்றும் அவரின் தந்தை ஆகிய 2 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.