அமேசான் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் தலைவரான ஜெப் பெசோஸ்இன் மகத்தான வெற்றி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
உலகின் மிகப்பெரிய நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனர், சிஇஓ மற்றும் தலைவரான ஜெப் பெசோஸ் 200 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 14.63 லட்சம் கோடி சொத்துக்கு சொந்தக்காரரான உலகின் முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். உலகின் இரண்டாவது பெரும் பணக்காரரான மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்சின் சொத்தை விட இது 90 பில்லியன் டாலர் அதிகம். உலகின் நம்பர் ஒன் பணக்காரர் பற்றி மேலும் சில தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் ஆல்பெர்பெக் நகரில் வசித்து வந்த ஜாக்லின் – டெட் ஜோர்க்சன் தம்பதியர் மகனாக ஜனவரி 12 1964இல் ஜெப்ரி பிரெஸ்டன் ஜோர்கென்ஸன்(இப்போதைய அமேசான் நிறுவனர்) பிறந்தார். பிரெஸ்டன் பிறந்த போது உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அவரின் தாய்க்கு வயது 17 தான். அவரது தந்தை அப்போது ஒரு பைக் கடை உரிமையாளராக இருந்தார். 1968ல் பெற்றோர் பிரிந்து விட்டனர். பின் கியூபாவிலிருந்து குடியேறிய மிகு வேல் மைக் என்பவரை தாய் ஜாக்லின் மணந்துகொள்ள பின் குடும்ப பெயர் பெஸோஸ் என்று மாறியது.
1986இல் இன்டல் பெல், லேப்ஸ், ஆண்டர்சன் கன்சல்டிங் உள்ளிட்ட நிறுவனங்களில் பெஸோசுக்கு வேலை கிடைத்தது. 1994 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் நாள் தனது முதல் நிறுவனமான கடாப்ரா-வை தொடங்கினார். இதுவே இவர் பின்னர் அமேசான் என்று மாறியது. இதில் அவரின் பெற்றோர் 3 லட்சம் டாலர்களை முதலீடு செய்தனர். முதலில் ஆன்லைன் புத்தக விற்பனை நிலையம் ஆக தொடங்கிய அமேசானில், 1998 இறுதிக்குள் பிற தயாரிப்புகள் பொருட்கள் விற்பனையும் சேர்த்தார் பெஸோஸ்.
2019 அமேசன் இன் அமேசானின் வருமானம் 280 பில்லியன் டாலராக உயர்ந்தது. அதன் லாபம் மட்டும் 11.5 பில்லியன் டாலராக விண்ணளவு உயர்ந்தது. 25 ஆண்டுகள் மண வாழ்க்கைக்கு பின் மனைவியை விவாகரத்து செய்த போது முன்னாள் மனைவிக்கு 25 சதவிகித அமேசான் பங்குகளை அவர் மாற்றிக் கொடுத்தார். ஆனால் அதற்குப் பின்னும் அவர் உலகின் நம்பர் 1 பணக்காரராக இருக்கிறார் என்பது தான் மிகச் சிறப்பான ஒன்று. பிசினஸ் இன்சைடர் இதழ் தகவல்படி, பிரிட்டிஷ் அரசு குடும்பத்தை விட இவர் 38 சதவிகிதம் பணக்காரர். அவரின் ஒரு வினாடி வருமானம் மட்டும் 2,489 டாலர்கள். இந்திய மதிப்பில் ரூபாய் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 016 ஆகும்.
ஜெப் பெசோஸ் விண்வெளி பயணத்தில் ஆர்வம் அதிகம். இதனால் அவரது சொத்தில் ஒரு கணிசமான பகுதியை விண்வெளி ஆய்வில் மற்றும் விண்கலங்கள் உருவாக்குவதில் முதலீடு செய்துள்ளார். வணிகரீதியாக ராக்கெட்டுகள் தயாரிக்கும் நிறுவனம் இவருடையது தான். அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் இவருக்கு சொந்தமானதுதான்.
2020 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உணவு வங்கிகள் மற்றும் உணவு சேவையில் ஈடுபட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான பீட் அமெரிக்காவிற்கு ஜெப் பெசோஸ் 100 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் இருப்பதை தக்கவைத்துக் கொள்ளவே பல நிறுவனங்கள் திண்டாடி வரும் நிலையில், சியாட்டிலை மையமாகக் கொண்ட பிரம்மாண்ட தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் பெரு வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த ஆண்டின் மார்ச் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பணியாளர்களை அமேசான் புதிதாக நியமித்துள்ளதாக ஜெப் கூறியுள்ளார்.
அமெரிக்க ஊடக பெரும் புள்ளியான டேவிட்சன் என்பவரிடமிருந்து உலகின் மிக விலை உயர்ந்த சொத்தாகக் கருதப்படும் வார்னர் எஸ்டேட்டை 165 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கிப் போட்டிருக்கிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் 9 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம்தான் பெரும் பணக்காரர்களின் கனவு இல்லமாக இருக்கும். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தனது சொத்து மதிப்பில் ஒரு சதவிகிதத்தை எட்டில் ஒரு பங்கு பணத்தை மட்டுமே இவ்வளவு விலையுயர்ந்த சொத்தை வாங்க செலவழித்துள்ளார். இதேபோல் நியூயார்க்கில் 80 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஒரு அபார்ட்மெண்ட்டையும் வாங்கியுள்ளார்.
பெஸோஸ் உண்மையில் ஒரு அற்புதமான தொழில்முனைவர். ஒன்றுமில்லாத நிலையிலிருந்து, 20 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய வளர்ச்சியை தனது வாழ்வில் எட்டியுள்ளார். பிரமாண்ட வளர்ச்சிக்கு அவரின் நேர்த்தியான திறமைகளும், ஆற்றலும் தான் காரணம்.
முயற்சி செய்தால், கடுமையாக உழைத்தால் அசாதாரணமான வெற்றிகளை வாழ்வில் குவிக்கலாம். பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெறலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறார் ஜெஃப் பெசோஸ்.