உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக அமேசான் இருக்கும் எனவும் தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும் எனவும் அந்நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்திருக்கிறார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாக போர் தொடுத்து வருவதால், உயிரைக் காப்பதற்காக அந்நாட்டு மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். தற்போது உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் உக்ரைன், ரஷ்யாவின் தாக்குதலால் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.
எனவே, மேற்கத்திய நாடுகள் உக்ரைனிற்கு உதவி அளித்து வருகின்றன. இந்நிலையில் அமேசான் நிறுவனத்தின் சிஇஓ, போரால் பாதிப்படைந்த உக்ரைன் நாட்டிற்கு இணைய பாதுகாப்பு உதவிகளும், நன்கொடைகளும் அளிப்பதற்கு முன்வந்திருக்கிறார்.
இதுபற்றி அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் நாட்டின் நிலை மோசமடைந்தது, வருத்தத்தை தருகிறது. அமேசான், உக்ரைன் நாட்டு மக்களுடன் நிற்கும். தொடர்ந்து உதவிகள் வழங்கும். இணைய பாதுகாப்பு உதவி, நன்கொடைகள், உபகரணங்கள் போன்றவை எங்கள் நிறுவனம் மற்றும் பணியாளர்களிடமிருந்து வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.