தெற்கு வங்கக்கடலில் ஆம்பன் புயல் அதி உச்ச தீவிர புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
இதனால் மத்திய வங்க கடலின் தென் பகுதியில் கடும் சூறாவளி காற்று வீசக்கூடும். புயல் தற்போது வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் வங்க கடலின் மத்திய பகுதியில் மிக பலமான சூறாவளி காற்று வீசக்கூடும்,
மணிக்கு 170 – 180 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மத்திய வங்க கடல், வடக்கு வங்க கடல் பகுதிக்கு 20ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் வங்கதேசத்தின் ஹாதியா தீவுக்கும் இடையே மே 20ம் தேதி இரவு இந்த புயல் கரையை கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மேற்கு தொடா்ச்சி மலையொட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் நகர்வு குறித்த நிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறோம் , ஆம்பன் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை, இதனால் புயல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.