2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி, அம்பேத்கர் மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார். ஹிந்து மில்ஸ் பகுதியில் நடைபெற்றுவரும் அதன் கட்டுமானப் பணிகளை மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க நாங்கள் முயற்சி செய்துவருகிறோம். இந்தக் கட்டுமானப் பணிகளுக்கு தேவையான நிதி தடைபடாமல் கிடைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கட்டுமானத்துக்குத் தேவையான சில அனுமதிகள் இன்னும் வழங்கப்படவில்லை. விரைந்து அனுமதிகள் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 2015இல் முதலமைச்சராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் 2020க்குள் மணிமண்டபத்தின் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும் என்றார். ஆனால் மணிமண்ட கட்டுமானப் பணிகள் மந்தமாக நடைபெறுவதாக அப்போதே எதிர்க்கட்சிகளாக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியிருந்தது” என்றார்.
மகாராஷ்டிராவில் முறையற்று பெய்யும் பருவமழை குறித்து அவர் கூறுகையில், “புவி வெப்பமயமாதலால் நாம் எதிர்கொள்ளும் பிரச்னை இது. அரசு எப்போதும் விவாசாயிகளுக்கு துணை நிற்கும். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுவருகிறோம்” என்றார்.