நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 1955ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை கடந்த 2016ம் ஆண்டிலேயே பாஜக நிறைவேற்ற முனைப்பு காட்டியது. ஆனால், மாநிலங்களவையில் போதிய பெரும்பன்மை இல்லாமை மற்றும் கடந்த அரசின் பதவிக்காலம் முடிவு உள்ளிட்ட காரணங்களால் அப்போது அந்த மசோதா காலவதியாகி விட்டது.
இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த சட்டத்துக்கு இரண்டு தனித்துவ காரணங்களால் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என அஞ்சுவதால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதால் நாட்டின் மற்ற பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை , இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்கள் விடுபட்டுள்ளததையும், இஸ்லாமியர்கள் சேர்க்கப்படாததையும் கண்டித்து போராட்டங்கள் அதிகரித்து வருகிறது இந்நிலையில், CAA, NRC, NPR க்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பேத்கார் பேரன் பிரகாஷ் அம்பேத்கார் தலைமையில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் விடுதலை கட்சி தலைவர் திருமாவளவன், மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர். குடியுரிமை திருத்த சட்டம் CAA , NRC, NPR ஆகியவற்றை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிரான பாடல்களை பாடி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்வதை தடுக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.