Categories
மாநில செய்திகள்

அம்பேத்கரின் 63ஆவது நினைவு நாள் – அரசியல் தலைவர்கள் அஞ்சலி!

அம்பேத்கரின் 63ஆவது நினைவு நாளை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அம்பேத்கரின் சிலைக்கு அரசியல் தலைவர்களும் பல்வேறு இயக்கங்களும் பொதுமக்களும் மலர்த் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்: சட்ட மாமேதை அம்பேத்கரின் 63ஆவது நினைவு நாளையொட்டி திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே மாவட்டச் செயலாளர் ஆவடி சாமு நாசர், திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ விஜி ராஜேந்திரன், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அம்பேத்கரின் மரியாதை

இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், திருவள்ளூர் ஆயில்மில் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த நிகழ்ச்சி செயலாளர் சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் அம்பேத்கரின் 63ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அரசு போக்குவரத்துக் கழக வாயில் முன்பு, உள்ள அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாநில பொதுச் செயலாளர் அண்ணாதுரை தலைமையில் மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதேபோன்று இந்திய குடியரசு கட்சி சார்பில் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாநிலச் செயலாளர் முத்துபாரதி தலைமையில் பாபாசாகிப் அம்பேத்கர் குடியரசு போக்குவரத்து தொழிற்சங்க பொதுச் செயலாளர் கௌதமன், துணைத் தலைவர் நடராஜன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கரூர்: அம்பேத்கரின் 63ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கரூர் பேருந்து நிலையம் அருகில் இந்திய குடியரசு கட்சி தலித் விடுதலை இயக்கம், திராவிட கழகம், விடுதலைச் சிறுத்தை கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர்த்தூவி முழக்கங்களை எழுப்பி வீரவணக்கம் செலுத்தினர்.

பெரம்பலூர்: பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோட்ட பொறுப்பாளர் சிவசுப்பிரமணியம் தலைமையிலும்; காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராஜிவ் காந்தி தலைமையிலும்; பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்டச் செயலாளர் உலக சாமிதுரை தலைமையிலும்; தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் காமராஜ் கணிதம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்சி: அம்பேத்கரின் 63ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் அருள்ஜோதி தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் நேரு, மாநகரச் செயலாளர் அன்பழகன், நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வர்த்தகப் பிரிவு மாநில துணைச் செயலாளர் ராஜா தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் மாநிலம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Categories

Tech |