பொதுமக்கள் வசதிக்காக 108 ஆம்புலன்ஸ் சேவை வசதி செய்து தரவேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு சுப்ரமணியபுரம், தாயில்பட்டி, சல்வார்பட்டி, வெற்றிலையூரணி, மீனாட்சிபுரம், கனஞ்சம்பட்டி, வெம்பக்கோட்டை, போன்ற பகுதிகளில் உள்ள கிராம மக்கள் தினமும் சிகிச்சைக்காக தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தைகளை பெற்ற தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் அதிக அளவில் வருகின்றனர். ஆனால் அவர்களை அழைத்துவர ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் சிகிச்சைக்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். எனவே 108 ஆம்புலன்ஸ் சேவையை தாயில்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதோடு வெம்பக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏதேனும் சாலை விபத்து ஏற்பட்டால் சாத்தூர் அல்லது சிவகாசியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு மிகவும் தாமதமாவதால் விபத்துக்குள்ளானவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் தனமூர்த்தி லிங்காபுரம் அருகே காயமடைந்தவரை மீட்க ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் தீயணைப்பு நிலைய வாகனம் மூலம் அவரை மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். எனவே பொதுமக்களின் வசதிக்காக வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு 108 ஆம்புலன்ஸ் சேவை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.