ஆம்புலன்சில் சென்று கொண்டிருக்கும் போது கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் செவிலியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மேட்டுநாகலேரி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறை மாத கர்ப்பிணியான சகுந்தலாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் சகுந்தலாவின் குடும்பத்தினர் 108 ஆம்புலன்சை வரவழைத்து வளையாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் சகுந்தலாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.
அதன்படி சகுந்தலாவை 108 ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சகுந்தலாவுக்கு பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்சை நிறுத்தினர். அதன்பின் மருத்துவ உதவியாளர் வெங்கட்ராமன் மற்றும் செவிலியர் ஜிலானி ஆகிய இருவரும் சகுந்தலாவுக்கு ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்த்தனர். இந்த பிரசவத்தில் சகுந்தலாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு தாயும் சேயும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் தக்க சமயத்தில் துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர் மற்றும் செவிலியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.