இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வரும் அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நாற்காலி’ படத்தின் பாடலை முதலமைச்சர் வெளியிடுகிறார் .
தமிழ் திரையுலகில் இயக்குனர் அமீர் யோகி , வடச்சென்னை ஆகிய படங்களில் நடித்துள்ளார் . அடுத்ததாக இவர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் நாற்காலி. இந்த படம் மிகுந்த பொருட்செலவில் நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது . இந்த படத்தை வி இஸட் துரை இயக்கியுள்ளார். இந்த படத்தை மூன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆதம்பாவா தயாரித்துள்ளார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக 555 பட நாயகி சாந்தினி ஸ்ரீதரன் நடித்துள்ளார் .மேலும் மாரிமுத்து , சரவண சக்தி, அர்ஜுனன் ,கோவை பாபு, ஜார்ஜ் விஜய், வினோத் சாகர், சுப்ரமணியசிவா, ராஜ்கபூர் ,ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, ரவி வெங்கட்ராமன், சலீமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .
நாற்காலி படத்திற்காக மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் கடைசியாக ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ என்ற பாடலை பாடியிருக்கிறார் . இந்நிலையில் இந்த பாடலை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 104வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 16ஆம் தேதி மாண்புமிகு தமிழக முதல்வர் திரு .எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் வெளியிட அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.