ஆப்கான் முன்னாள் ராணுவ மந்திரியின் மகன் வெளிநாட்டில் ஆடம்பர மாளிகை வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானில் கடந்த மாதம் அமெரிக்க படை வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் தலைநகர் காபூலை கைப்பற்றினர். இந்த நிலையில் நாட்டு மக்களை பற்றி கவலைப்படாமல் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி மூட்டை மூட்டையாக பணத்தோடு தனது மனைவியுடன் அண்டை நாட்டுக்கு தப்பியோடினார். மேலும் 4 கார்களில் எடுத்து வந்த பணத்தை ஹெலிகாப்டரில் நிரப்பிய பின் எஞ்சியதை சாலையில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் ஆப்கானில் 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தலீபான்களின் ஆட்சியில் வறுமை மற்றும் அடக்குமுறையை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால் அதிபர், மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் குடும்பத்தோடு வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். தற்போது ஆப்கானின் முன்னாள் இராணுவ மந்திரி அப்துல் ரஹீம் வர்தாக்கின் மகன் தவூத் வர்தாக்(45) அமெரிக்காவின் மியாமி நகரில் ₹157.5 கோடி மதிப்பில் ஆடம்பர மாளிகை ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்த மாளிகை 9,000 சதுரஅடி பரப்பளவில், 5 படுக்கையறைகள், 7 குளியலறைகள், நீச்சல் குளம் மற்றும் மாளிகை முழுதும் கண்ணாடி சுவர்கள் என சகல வசதிகளும் கொண்டுள்ளது. ஏற்கனவே இவருக்கு மியாமி கடற்கரை அருகே ₹39 கோடி மதிப்பில் சொகுசு பங்களா சொந்தமாக உள்ளது. அதே போல் தவூத் வர்தாக்கின் மூத்த சகோதரர் ஹமீத் வர்தாக் அமெரிக்காவில் மிகப்பெரிய தொழிலதிபராகவும், இராணுவ போக்குவரத்து நிறுவனத்தை நடத்துவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.