சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் ஆகிய மூன்றும் கொரோனா வைரஸை கொல்லும் வல்லமை கொண்டது என்று அமெரிக்க ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் செயலாளர் வில்லியம் பிரையன் இந்த ஆய்வு குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். உமிழ் நீர் திவலைகளில் உள்ள கொரோனா வைரஸ் சூரிய ஒளி படாத உலர்வான இடங்களில் அதிகபட்சமாக 18 மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கும் என்று அவர் கூறியுள்ளார். மாறாக நேரடி சூரிய ஒளியும், வெப்பமும், அதிக ஈரப்பதமும் வைரஸை ஒன்றறை நிமிடங்களில் செயலிழக்க செய்துவிடும் என்று அவர் தெரிவித்தார்.
ஆய்வுகள் இன்னும் முழுமை பெறாத நிலையில் அமெரிக்காவில் எதிர்வரும் கோடைகாலத்தில் வைரஸ் முழுமையாக அழிந்துவிடும் என்று கருதுவது பொறுப்பற்ற செயல் ஆகிவிடும் என்று அவர் எச்சரித்தார். ஆனால் கோடை காலம் நிலைமை மேம்படுவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் இந்த புதிய ஆய்வு முடிவுகளை கொரோனா சிகிச்சையில் பயன் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு ஆய்வாளர்களை அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கேட்டுள்ளார்.