அமெரிக்காவில் 25% இறப்பு எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்படுவதாக யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது
சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்காவில் தொற்றின் தாக்கம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டு வருகின்றது இதுவரை அங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,78,500 ஆகவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,30,789 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் யேல் பல்கலைக்கழக ஆய்வு குழு அமெரிக்கா உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை 25 சதவீதம் குறைத்து மதிப்பிட வாய்ப்புள்ளது என கூறியிருந்தது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொற்றினால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,81,000 என யேல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் குழு தெரிவித்திருக்கிறது. இது சராசரியைவிட 1,22,300 அதிகம் ஆகும். அந்த சமயத்தில் அமெரிக்காவில் அதிகாரபூர்வ தகவலின் அடிப்படையில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95,235 என பதிவாகியிருந்தது. அனைத்து காரணங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அல்லது நிமோனியா மற்றும் இன்ஃபளூயன்சா போன்ற குறிப்பிடப்படாத விளைவுகளினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் மதிப்பிடுவதன் மூலமாக கொரோனா தொற்றின் பாதிப்பு பற்றிய முழு விவரத்தை கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களுக்கு இடையில் இறப்பு பற்றிய தகவல்கள் அதிக அளவில் மாறுபடுகின்றது. சில இறப்புகள் மக்கள் மருத்துவமனைக்கு செல்ல பயப்படுவதனால் ஏற்படும் இரண்டாம் நிலையின் காரணமாக இருக்கலாம் என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது. வெளியிட்ட புள்ளி விவரங்கள் மதிப்பீடு மட்டுமே என்றும் ஆனால் உத்தியோகபூர்வ கணக்கீடு கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்பை குறைத்து மதிப்பிடலாம் என்றும் முடிவு செய்துள்ளனர்.