இஸ்லாமிய நாடான ஈரானில் வெள்ளிதோறும் பிரார்த்தனைகள் சிறப்பாக நடைபெறும். அவ்வாறு இன்று (ஜனவரி 17) நடைபெற்ற பிரார்த்தனையில் திடீரென்று பங்கேற்ற ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப்பேசினார்.
அப்போது பேசிய அவர், “அமெரிக்கா எவ்வளவு அழுத்தங்களைத் தந்தாலும் ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது. ஈரான் படைத் தளபதி சுலைமானியின் இறுதி ஊர்வலத்தில் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இது மக்கள் ஈரானுக்கு ஆதரவாக உள்ளனர் என்பதற்கு சாட்சி.
ஈரான் ராணுவத் தளபதி சுலைமானியை கோழைத்தனமாக அமெரிக்கா கொன்றுள்ளது. இதனால் ஈரான் தனது வலிமையான படைத் தளபதியை இழந்துள்ளது” என்றார்
மேலும், அதைத்தொடர்ந்து ஈரான் பாக்தாத்திலுள்ள அமெரிக்க படைகள் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதல் என்பது அமெரிக்காவின் வல்லரசு பிம்பத்தின் மீது விழுந்த அடி என்றும் விமர்சித்தார். அமெரிக்க படைகளை அப்பகுதியை விட்டு விரட்டுவதே அமெரிக்காவுக்கு அளிக்கும் உண்மையான தண்டனை என்றும் அவர் கூறினார்.
சுலைமானி கொல்லப்பட்டதையடுத்து ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரேனின் பயணிகள் விமானத்தையும் ஈரான் தவறுதலாக சுட்டு வீழத்த நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.