வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்காக அமெரிக்கா பயணக்கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை வழங்கியுள்ளது.
கொரோனா தொற்று பரவலால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலில் இருப்பது அமெரிக்கா. இதன் காரணமாக பல்வேறு பயணக்கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்திருந்தது. தற்போது ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து பிற நாடுகளில் கொரோனா பரவலானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா பயணக்கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அளித்துள்ளது.
அதில் “இரு தவணை தடுப்பூசிகள் செலுத்திய இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் வருகின்ற எட்டாம் தேதி முதல் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை காட்ட வேண்டும். மேலும் அந்தச் சான்றிதழானது மூன்று நாட்களுக்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.
ஒருவேளை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பயணிகள் அமெரிக்க குடிமக்களாகவோ அல்லது நிரந்தர குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலோ ஏற்றுக் கொள்ளப்பட்ட தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாத வெளிநாட்டவர்களாக இருந்தாலோ அவர்கள் புறப்பட்ட ஒரு நாளுக்குள் பரிசோதனை செய்திருக்க வேண்டும்.
குறிப்பாக தடுப்பூசி செலுத்தி கொள்ளாத சிறுவர், சிறுமியர்கள் தாங்கள் பயணம் செய்கிற பெரியவர்களுடன் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதிலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுடன் பயணம் செய்தால் மூன்று நாட்களுக்கு முன்னதாகவும் தடுப்பூசி போடாத பெரியவர்களாக இருந்தால் பயணம் மேற்கொள்ளும் தினம் பரிசோதனை செய்ய வேண்டும்.