ஃபைசர் நிறுவனம் கொரோனாவால் ஏற்படும் இறப்பு அபாயத்தை 89 சதவீதம் வரை குறைக்கும் மாத்திரையை பரிசோதித்துள்ளது.
உலகம் முழுதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட மாத்திரைகளை சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என பிரிட்டன் அரசு அறிவித்தது. மேலும் உலகின் முதல் நாடக பிரிட்டன் அரசு ‘மோல்நுபிராவிர்’ என பெயரிடப்பட்ட இந்த மாத்திரையை அங்கீகரித்தது.
இந்த நிலையில், கொரோனா உயிரிழப்பை 89 சதவீதம் கட்டுப்படுத்தும் ‘ஆண்டிவைரல்’ மாத்திரையை அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் செயல்பாடுகள் பிரிட்டன் மாத்திரைகளை விட அதிக செயல்திறன் உடையது என்றும் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. மேலும், முழுமையான பரிசோதனை முடிவுகளின் தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஆனாலும், ஃபைசர் நிறுவனம் இடைக்கால பரிசோதனை தரவுகளை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாக அமைப்பிடம் சமர்ப்பிக்கும் என தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஃபைசர் நிறுவனத்தின் மருந்தை உட்கொண்டவர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக, உயிரிழப்பு எதுவும் இதுவரை ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.