உலக அளவில் அமெரிக்கா 25 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை பகிர்ந்து வழங்குவதற்கான நாடுகளின் வரிசையில் இலங்கையும் உள்ளது.
தற்போது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதித்து வருவதால் அண்டை நாடுகளின் உதவியை நாடுகின்றனர். அதேபோல் அவசர தேவைக்காக உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகள் தடுப்பூசி கேட்டு அமெரிக்காவின் உதவியை கோரியிருந்தது. அதில் அவசர தேவையை பூர்த்தி செய்வதற்காக இலங்கையும் 600,000 ஆஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை அமெரிக்காவிடம் கேட்டிருந்தது.
இதையடுத்து அமெரிக்கா தற்போது தங்களிடம் தடுப்பூசி கேட்டு நாடியுள்ள நாடுகளுக்கு உதவி செய்யும் வகையில் 25 மில்லியன் தடுப்பூசிகளை முதல் பகுதியாக பகிர்ந்து கொள்ள மற்ற நாடுகளையும், இலங்கையையும் தேர்வு செய்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை கூறுகையில், உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளிடமிருந்து அமெரிக்கா தடுப்பூசிகளை பகிர்ந்து வழங்குவதற்கான கோரிக்கைகளை பெற்றுள்ளது. மேலும் இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த தடுப்பூசிகள் சலுகைகளைப் பெறவோ அல்லது மற்ற நாடுகளிடமிருந்து உதவிகளை பெறவோ அல்ல இது கொரோனா நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கவும், உலக மக்களின் உயிரை காப்பாற்றுவதற்கு மட்டுமே நாங்கள் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல் இலங்கை, நேபாளம், இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மாலத்தீவுகள், பங்களாதேஷ், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், லாவோஸ், தாய்லாந்து, வியட்நாம், பப்புவா நியூ கினியா, பசுபிக் தீவுகள் மற்றும் தைவான் ஆகிய நாடுகளுக்கும் இந்த 25 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் பகிர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.