கொரோனா தடுப்பூசியை அமெரிக்கா வீரர்கள் கட்டாயமாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்று ராணுவ பாதுகாப்பு செயலர் தகவல் வெளியிட்டுள்ளார்.
உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ்க்கு எதிராக மக்கள் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் பின்பற்றி வருகின்றனர். மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தடுப்பூசி செலுத்துவதற்காக பல்வேறு உலக நாடுகள் சலுகைகளையும் அதே சமயத்தில் சில கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் தற்பொழுது கொரோனா வைரஸ் பரவலானது கட்டுக்குள் இருக்கிறது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து அமெரிக்கா ராணுவ பாதுகாப்பு செயலரான லாயிட் ஆஸ்டின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “அனைத்து இராணுவ வீரர்களும் கண்டிப்பாக ஒரு தவணை தடுப்பூசியாவது கண்டிப்பாக செலுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அதிலும் கடந்த மாதம் பயோஎண்டேக் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியதில் இருந்து அமெரிக்கா வீரர்கள் தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக ராணுவ அமைப்பு கூறியுள்ளது. குறிப்பாக மருத்துவம், மதம் அல்லது நிர்வாகம் போன்றவற்றினால் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் இருந்து ராணுவ வீரர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முக்கிய ராணுவ பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் தடுப்பூசி செல்லுத்திக் கொள்ள மறுத்தால் அவர்கள் இடைநீக்கம் அல்லது பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.