அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பணியாற்றுவது கௌவுரமிக்கதாக கருதப்படுகிறது.
அமெரிக்க அதிபரின் அலுவலகமான வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களை அதிகாரிகளாக நியமனம் செய்வது வழக்கம். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது, “2021-2022 ஆம் ஆண்டுக்கான வெள்ளை மாளிகையின் பயிற்சி உதவியாளர் பணிக்கு 19 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் 3 போ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஜாய் பாசு, சன்னி படேல் ஆகியோர் கலிஃபோர்னியா மாகாணத்தை சோ்ந்தவா்கள். ஆகாஷ் ஷா என்பவர் நியூ ஜெர்சியைச் சேர்ந்தவர்.
கௌரவமிக்க வெள்ளை மாளிகை பயிற்சி உதவியாளர் பணி, சம்பளத்துடன் கூடிய முழு நேரப் பணியாகும். அவர்கள் வெள்ளை மாளிகை அதிகாரிகள், கேபினட் அமைச்சர்கள் மற்றும் முதுநிலை அரசு அதிகாரிகளின் உதவியாளராக இருப்பார்கள். மேலும் பல்வேறு பிண்ணனி கொண்டவர்களே இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அனைத்து தரப்பையும் சேர்ந்த இளைஞர்கள், அரசு செயல்படும் விதத்தை அனுபவம் மூலம் அறிந்து சிறந்து விளங்க இந்த ஓராண்டு ‘பெலோஷிப்’ திட்டம் தொடங்கப்பட்டது” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இவர்களில் ஜாய் பாசு என்பவர் வெள்ளை மாளிகையின் பாலின கொள்கை கவுன்சிலில் பணியாற்றவுள்ளார். மேலும் சன்னி படேல் என்பவர் உள்நாட்டு பாதுகாப்பு துறையில் பணியாற்றுவார். அதோடு ஆகாஷ் ஷா என்பவர் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையில் அதிகாரியாக பணிபுரிவார் என்றும் அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.