அமெரிக்காவில் பல நாட்களாக மாயமான பெண் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 12 நாட்களாக மாயமான கிறிஸ்டினா நான்ஸ்(29) என்ற பெண் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் தனது வீட்டிற்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது. மேலும் அவரை தொடர்பு கொள்ள முயன்றதில் ஏமாற்றமே மிஞ்சியதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கிறிஸ்டினா நான்ஸின் குடும்பத்தினர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் 5 நாட்களுக்கு பின் போலீஸ் அதிகாரி ஒருவர், கிறிஸ்டினா நான்ஸின் சடலத்தை பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனம் ஒன்றில் அடையாளம் கண்டுள்ளார். இந்த சம்பவம் கிறிஸ்டினாவின் குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து Huntsville போலீசார் கூறுகையில், “29 வயதான கிறிஸ்டினா நான்ஸ் அக்டோபர் 7 ஆம் தேதி அன்று பயன்பாடின்றி நிறுத்தி வைத்திருந்த காவல்துறை வாகனத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அந்த வாகனம் காவல்துறைக்கு சொந்தமான வாகன நிறுத்தப் பகுதியில் இருந்தது.
மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில், செப்டம்பர் 25 ஆம் தேதி சுமார் 12.30 மணியளவில் கிறிஸ்டினா நான்ஸ் போலீஸ் வாகனத்தினுள் நுழைவது பதிவாகி உள்ளது. ஆனால் உடற்கூராய்வில் சந்தேகிக்கும் வகையில் எதுவும் சிக்கவில்லை. அவரது மரணம் கொலையாக இருக்கவும் வாய்ப்பில்லை” என்று கூறியுள்ளனர். தற்போது கிறிஸ்டினா மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், போலீசார் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.