ஹைதி அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய காரணமாக இருந்த அமெரிக்க மருத்துவர் கைதாகியுள்ளார்.
கரீபியன் தீவில் அமைந்திருக்கும் ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ்(53), கடந்த 7-ந்தேதி அன்று போர்ட் அவ் பிரின்சில் இருக்கும் அவரின் வீட்டில் வைத்து ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டு அவரை கொலை செய்தது. இதில், அதிபர் ஜோவனல் மோயிஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
மேலும் இக்கொடூர சம்பவத்தில், அவரின் மனைவி மார்ட்டின் மோயிஸ் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், 28 நபர்கள் கொண்ட வெளிநாட்டு கூலிப்படையினர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, அவர்களை கைது செய்ய மேற்கொண்ட நடவடிக்கையில் இந்த கும்பலை சேர்ந்த மூவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே சமயத்தில் மீதமுள்ள 8 பேர் காவல்துறையினரிடமிருந்து தப்பி விட்டனர். எனவே இந்த கடும் சூழலிலும், தப்பி சென்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்நிலையில் அதிபர் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட அமெரிக்க மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி ஹைதி காவல்துறையின் தலைமை அதிகாரியான லியோன் சர்லஸ் தெரிவித்துள்ளதாவது,
அதிபர் ஜோவனல் மோயிஸ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான கிறிஸ்டியன் இமானுவேல் சனோன்(63) என்பவரை கைது செய்துள்ளோம். இவர் ஹைதியில் பிறந்தவர். ஆனால் தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசிக்கிறார். மருத்துவரான இவர் அரசியல் காரணங்களுக்காக தனி விமானத்தில் ஹைதி வந்திருக்கிறார்.
மேலும் இவரின் திட்டம் அதிபரை கைது செய்யவேண்டும் என்பது தான். அதன் பின்பு திட்டத்தை மாற்றிக்கொண்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இருப்பினும் இதுகுறித்த தெளிவான விவரங்களை அவர் தரவில்லை. எனவே தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரி தெரிவித்துள்ளார்.