ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்க ராணுவம் கடந்த வாரம் கொன்றது. அதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குல் நடவடிக்கைகளை கண்டித்து நியூ யார்க்கில் நேற்று போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில், ‘ஈரானுடன் போர் வேண்டாம்’ (Say no to war with Iran), ‘ஈரானுக்கு எதிராக போரோ பொருளாதாரத் தடைகளோ விதிக்கப்படக்கூடாது’ (No war or sanctions on Iran), ‘நாங்கள் தேர்ந்தெடுப்பது அன்பை’ (We choose peace) போன்ற பாதாகைகளுடன் ஏராளாமானோர் பங்கேற்றனர்.
இது தொடர்பாக போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் கூறுகையில், “ஈரானுக்கு எதிராகவும் உலக மக்களுக்கு எதிராகவும் அமெரிக்கா போரைத் தொடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தவே இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம்” என்றார்.
சட்ட ஒழுங்கை பாதுகாக்க வழக்கத்தைவிட மிக அதிகமான காவலர்கள், இந்தப் போராட்டத்தின்போது குவிக்கப்பட்டனர். மேலும், ஒரு ஹெலிகாப்டர் மூலமும் இந்தப் போராட்டத்தை நியூ யார்க் காவல் துறையினர் கண்கானணித்தனர்.
ஈரான் மீது போரை தொடுக்கக் கூடாது என்றும் இரு நாடுகளுக்கிடையே நிலவிவரும் பதற்றத்தை குறைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் அமெரிக்க முழுவதும் 360க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொருவர் கூறுகையில், “ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியை கொன்று இதை ஆரம்பித்து வைத்தது அமெரிக்காதான். எனவே, இப்போது எந்த பதில் தாக்குதலையும் நடத்தக்கூடாது” என்றார்.