முதியவர்களுக்கு கூடுதல் அல்லது மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றிற்கு எதிராக மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதிலும் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணியானது மற்ற நாடுகளை விட தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இளைஞர்களுக்கும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால் கூடுதல் தவணை தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ளலாம் என்று அமெரிக்கா மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இது குறித்து அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகமான FDA விடம் அனுமதி கேட்கப்பட்டது. இதனை தீவிரமாக ஆலோசனை செய்த FDA அமைப்பு 65 வயது மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ள இளைஞர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால் அவர்களும் கூடுதல் தவணை தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தி கொண்ட ஆறு மாதங்களுக்குப் பின்னரே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதிலும் கூடுதல் அல்லது மூன்றாவது தவணையாக பைசர் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக CDS என்னும் அமெரிக்கா நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்திடமும் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. இவர்களிடம் ஒப்புதல் வழங்கிய பின்னர் பூஸ்டர் தடுப்பூசிக்கு அமெரிக்காவில் முழுமையான அங்கீகாரம் கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.