அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபடுமானால் தங்களது தாக்குதல் திறனை அதிகரித்து கொள்ளப்போவதாக வடகொரியா அரசு எச்சரித்துள்ளது.
அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து கணினி மூலம் போர் பயிற்சி மேற்கொள்ளப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போர் பயிற்சியானது வரும் 16 முதல் 25 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. ஆனால் இந்த போர் பயிற்சிக்கு முன்பாக இரண்டு நாட்டு படைகளும் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபடப் போவதாக தென் கொரியாவில் உள்ள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த ஓத்திகையானது நான்கு நாட்கள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து வடகொரியா மீதான படையெடுப்பிற்கு ஒத்திகை பார்க்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து வடகொரியா நாட்டின் அதிபரான கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜாங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது “அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபடுமானால் அதற்கு தக்க பதிலடியாக தங்களது தாக்குதல் திறனை அதிகரித்து கொள்வோம். மேலும் அமெரிக்க அரசு வடகொரியாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வரும் இந்த நேரத்தில் இதுபோன்ற ராணுவ ஒத்திகையில் ஈடுபடுவது தனது இரட்டை வேடத்தை வெளிபடுத்தியுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.