இந்திய பிரதமர் நரேந்திர மோடி பல முக்கிய விஷயங்களில் பங்கேற்க அமெரிக்க சென்றுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஐநா சபை கூட்டம், இந்தியா- அமெரிக்கா இரு நாடுகள் பேச்சுவார்த்தை, குவாட் நாடுகளின் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். பிரதமர் மோடியின் அமெரிக்க வருகையை அடுத்து முன்னதாகவே வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவில் தங்கி உள்ளார். கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை இருக்கும் இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா சென்றதும் பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் வாஷிங்டனில் நடைபெறும் கொரோனா பரவல் தடுப்பு மாநாட்டில் பங்கேற்கிறார். அதே போல அமெரிக்க தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடிய பின்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடத்தும் விருந்தில் பங்கேற்றுவிட்டு அதிபர் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து பேச இருக்கின்றார்.
இதைத்தொடர்ந்து இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய குவாட் என்ற நாற்கர கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதோடு, தனித்தனியே ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமரான யோஷிஹிடே சுகா ஆகியோரிடம் பேச இருக்கிறார்.
செப்டம்பர் 25ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் 76வது கூட்டத்தில் முதல் பேச்சாளராக கலந்துகொள்ள இருக்கும் பிரதமர் மோடி, பிராந்திய விவகாரங்கள், எல்லை தாண்டிய பயங்கரவாதம், கொரோனா பெருந்தொற்று,காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் பேச இருக்கிறார். பிரதமர் மோடியின் இந்த பயணம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் இருப்பார்கள் என்று தெரிகிறது.