ரஷ்யாவை நோக்கி வந்த அமெரிக்க உளவு விமானம் திருப்பி அனுப்பப்பட்டதாக தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டு விமானங்கள் ரஷ்ய நாட்டு எல்லையை நோக்கி வருகிறது. அதனை அந்நாட்டு போர் விமானங்கள் தடுத்து திருப்பி அனுப்புவது வழக்கமாக இருக்கின்றது. அதன்படி செவ்வாய்க்கிழமை கருங்கடலுக்கு மேல் தங்களது எல்லையை நோக்கி வந்து கொண்டிருந்த அமெரிக்காவின் உளவு விமானத்தை ரஷ்யா திருப்பி அனுப்பியது. இதுகுறித்து ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது “கருங்கடலுக்கு மேல் தங்களது எல்லையினை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு விமானத்தை அந்நாட்டின் தெற்கு ராணுவ மாவட்ட விமான பாதுகாப்பு படைகள் கண்டுபிடித்தது.
இதனால் விமானத்தை அடையாளம் காணவும், அது ரஷ்ய எல்லையை மீறுவதை தடுப்பதற்காகவும் ஒரு Su-27 ஜெட் போர் விமானம் சென்றது. இதனையடுத்து தங்களது எல்லையை நோக்கி வருவது அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான RC-135 என அடையாளம் கண்ட Su-27 குழுவினர், ரஷ்ய எல்லையை மீற விடாமல் அதை தடுத்து நிறுத்தி வந்த வழியே திருப்பி அனுப்பினர். அதன்பின் வெளிநாட்டு ராணுவ விமானம் தங்களது எல்லையை விட்டு விலகிச்சென்ற பிறகு, ரஷ்யாவின் Su-27 பாதுகாப்பாக அதன் விமான தளத்திற்கு சென்றுவிட்டது. ஆகவே ரஷ்யாவின் Su-27 ஜெட் விமானத்தின் இந்த நடவடிக்கை சர்வதேச விமானச் சட்டத்துடன் கடுமையான இணக்கத்துடன் செய்யப்பட்டது” என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.