அமெரிக்காவின் சிறந்த பாடகி ஒருவர் அவருடைய திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் சிறந்த பாடகி பட்டியலில் இடம் பிடித்தவர் 39 வயதுடைய பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆவார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது நெருங்கிய நண்பரான ஜேசன் ஆலன் அலெக்சாண்டரை மணம் முடித்துள்ளார். ஆனால் இந்த நிகழ்ச்சி நடந்த 55 நிமிடத்திலேயே இந்த திருமணம் செல்லாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதாவது தனது செயல் குறித்த புரிதல் அவருக்கு இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அடுத்த சில மாதங்களிலேயே கெவின் பெடர்லைன் என்பவரை அவர் திருமணம் செய்துள்ளார். ஆனால் அந்த திருமண வாழ்க்கையும் நீண்ட காலம் அவருக்கு தொடரவில்லை. அதன்பின் கடந்த 2007 ஆம் ஆண்டு அவர்கள் இருவருக்கும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அவர் தனது தந்தையான ஜேமி ஸ்பியர்ஸ் கட்டுப்பாட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
இதன் காரணமாக தனது பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை தொடர்பான எந்த ஒரு முடிவையும் எடுக்கும் தனிப்பட்ட உரிமை அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பிரிட்னி ஸ்பியர்ஸ் அவருடைய நீண்டகால காதலரான நடிகர் மற்றும் உடற்பயிற்சி பயிற்சியாளருமான 27 வயது உடைய சாம் அஸ்காரியை மணம் முடிப்பதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே அவரது தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேற நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடந்து வந்துள்ளது. சமீபத்தில் தனது தந்தையான ஜேமி ஸ்பியர்ஸ் பாதுகாப்பில் இருந்து வெளியேற அனுமதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் அவர் தனக்கும் தனது வெகுநாள் காதலரான சாம் அஸ்காரிக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக கூறி அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். ஆனால் திருமணம் எங்கு எப்போது நடைபெறும் என்பது குறித்து தகவலை அவர்கள் வெளியிடவில்லை.