கட்டுக்கதைகளை நம்பி ஏமாற வேண்டாமென பிரபல ஹிந்தி நடிகர் அமீர்கான் ரசிகர்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவானது நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஏப்ரல் மாதத்தில் அன்றாட வாழ்க்கையை வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தியவர்கள் அனைவரும் ஒருவேளை உணவுக்காக கூட கஷ்டப்படும் சூழல் என்பது ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நடிகர்,
நடிகைகள் அரசியல் தலைவர்கள் என பலரும் தாமாகவே உதவ முன்வந்தனர். அந்த வகையில், கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி டெல்லியில் மிகவும் பின்தங்கிய பொருளாதார சூழ்நிலையில் வசிக்கும் மக்கள் இருக்கும் இடத்திற்கு ஒரு ட்ரக் வந்ததாகவும், அந்த ட்ரக்கில் ஒரு கிலோ கோதுமை மாவு மூட்டையுடன் ரூபாய் 15 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்ததாகவும் டிக்டாக் செயலி மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக வீடியோக்கள் பரவி வந்தன. அந்த பணத்தை வைத்தது அமீர்கான் தான் என்றும், ஏழைகளுக்கு உரிய முறையில் பணம் சேர வேண்டும் என்பதற்காக அவர் இதை செய்துள்ளார் என்றும் பரவி வந்தன.
இந்நிலையில் வீடியோ குறித்து அமீர்கான் விளக்கமளித்துள்ளார். அதில், கோதுமை மாவு மூட்டைக்குள் பணம் வைத்து அனுப்பும் நபர் நான் இல்லை. நான் அம்மாதிரியான எந்த செயலும் செய்யவில்லை. இது கட்டுக் கதையாக இருக்கலாம் அல்லது ராபின்ஹூட் தான் யார் என்பதை மக்களுக்கு காட்ட விரும்பாமல் இம்மாதிரியான உதவிகளை செய்ய முனைந்து இருக்கலாம் என்று தெரிவித்ததுடன் கட்டுக் கதைகளை நம்பி ஏமாறாமல் பத்திரமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
https://twitter.com/aamir_khan/status/1257165603678240768