பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அக்கட்சியின் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நாளை விருந்து அளிக்கிறார்.
இந்திய நாடாளுமன்ற தேர்தல் 543 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு பதிவு மே 23 ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிப்பு வெளியாக உள்ளது. இத்தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் தொடங்கி, மே 19 -ஆம் தேதி வரை நடைபெற்றது. மக்களவை தேர்தல் இறுதி கட்ட வாக்குப்பதிவு நேற்றே முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் தமிழத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜகவுக்கு தமிழகத்தில் 6 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நாளை இரவு விருந்து அளிக்கிறார். டெல்லி விருந்தில் கலந்துகொள்ள வருமாறு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அமித்ஷா சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்களும் இந்த விருந்தில் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.