மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர இருக்கும் நிலையில் #GoBackAmitShah என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். இன்று பிற்பகல் 1:40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் மத்திய அமைச்சர் அமித்ஷா, எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வு எடுக்கிறார். பின்னர் மாலை 4 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.
இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் 380 கோடி ரூபாய் மதிப்பிலான நீர்தேக்க திட்டத்தினை காணொலி மூலம் துவக்கி வைக்கிறார். அத்துடன், 61 ஆயிரத்து 843 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையையொட்டி, சென்னையில் சுமார் 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே தமிழகத்துக்கு பிரதமர் மோடி வரும்போதெல்லாம் எப்படி #GoBackModi என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகுமோ அதே போல தற்போது #GoBackAmitShah என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருவது பாஜகவினரின் மகிழ்ச்சியை கலைத்துள்ளது. இதுந்தாலும் அமித்ஷாவை வரவேற்கும் வகையில் #TNwelcomeschanakya என்ற ஹேஷ்டாக்கும் ட்ரெண்டாகி வருகின்றது.