தமிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகம் தனித்துவத்துடன் செயல்படுகிறது என மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் 140.38 லட்சம் இட்லி, 53.24 லட்சம் கலவை சாதம், 37.85 சப்பாத்தி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து முதியவர்கள், தொழிலாளர்கள், ஏழை மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் தற்போது அம்மா உணவகங்களை நோக்கி வரத்தொடங்கியுள்ளனர். மொத்தமாக 85 லட்சம் மக்கள் அம்மா உணவகத்தின் மூலம் பயனடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தொடங்கி வைத்த போது, அம்மா உணவகங்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. சென்னையில் 200 வார்டுகளில் வார்டுக்கு 2 என்ற அடிப்படையில் 400 அம்மா உணவகங்களும், சென்ட்ரல், ஸ்டான்லி, ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 7 அரசு மருத்துவமனைகளிலும் மொத்தமாக 407அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகங்களிலும், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 700 அம்மா உணவகங்கள் இயங்கிவருகின்றன. முன்னதாக சுமார் 12 லட்சம் பேர் இந்த உணவகங்களில் உணவருந்தி வந்தனர். ஆனால், ஊரடங்கு காலகட்டத்தில் சுமார் 30 லட்சம் பேருக்கு உணவு வழங்கிவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கத்தைவிட, ஊரடங்கு காலங்களில் அம்மா உணவகங்களில் 5 மடங்கு அதிகமாக உணவு விற்பனையாகிறது. இந்த நிலையில், அம்மா உணவகத்தை வைத்து அதிமுக அரசு அரசியல் செய்வதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றசாட்டு தெரிவித்தன. இந்த குற்றசாட்டை தொடர்ந்து அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அம்மா உணவகத்தில் மக்கள் நன்மை அடைவது குறித்து மத்திய அரசு பாராட்டி வருகிறது.