அம்மா மினி கிளினிக் திட்டம் தங்கள் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதால் மேலநெட்டூர் கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள மேட்டூர் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரியலூர், ஆலம்பச்சேரி, மணக்குடி, கார்குடி, ஆலங்குளம், நாடார் குடியிருப்பு ஆகிய கிராமங்கள் இருக்கின்றன. இங்கே உள்ள மக்கள் தங்களுக்கு தலைவலி காய்ச்சல் என அவதிப்படும் பொது மருத்துவ வசதிக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு 16 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்லவேண்டியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி தொடங்கப்படும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்து கிராம மக்கள் பயன் பெறுவதற்காக தொடங்கிவைத்தார்.
மாநிலம் முழுவதும் மருத்துவ வசதி இல்லாத இடங்களில் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. மேட்டூர் கிராமத்திலும் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனவே அங்கு உள்ள சுகாதார நிலையத்தை தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்து வைத்திருந்தனர். நேற்றுமுன்தினம் அம்மா மினி கிளினிக் அமைக்கும் பணியை நிறுத்துமாறு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பணிகள் நிறுத்தப்பட்டது எனவே கிராம மக்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
இதுகுறித்து கிராம ஊராட்சி தலைவர் சங்கீதா ராஜ்குமார் கூறுகையில், “எங்கள் கிராமத்திற்கு அமைக்கப்பட்டிருந்த அம்மா மினி கிளினிக் திட்டத்தை அதிகாரிகள் திடீரென நிறுத்தினர். அரசியல் காரணங்களை காட்டி இது வேறு இடத்திற்கு செல்லப்படுவதாக தெரிகிறது. எனவே இதுகுறித்து ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளேன். புகாரை வைத்து ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார். எனவே விரைவில் அம்மா மினி கிளினிக் எங்கள் கிராமத்தில் தொடங்க நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன் என கூறினார். இதுகுறித்து சிவகங்கை சுகாதாரத்துறை இணை இயக்குனர் யசோதா மணியிடம் கேட்டபொழுது அம்மா மினி கிளினிக் தொடங்குவதற்காக சம்பந்தப்பட்ட கிராமத்தில் ஆய்வு செய்தோம்.
4 கிராமங்களில் இத்திட்டம் அமைப்பது தொடர்பாக ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறோம். ஒரு இடத்தில் அமைக்க 5 இடத்தை ஆய்வு செய்து வருகிறோம். எந்த இடத்தில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட வேண்டும் என ஆட்சியரே முடிவெடுப்பார் என்றார். இதை குறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில் அம்மா மினி கிளினிக் திட்டம் கொண்டுவரப்பட்டது வரவேற்கத்தக்கது. இதனால் கிராமங்களில் உள்ள மக்களுக்கு எளிதில் மருத்துவ வசதி கிட்டும். அதனால் எங்கள் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றனர்.