திருமணமாகி 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவட்டார் அருகே இட்டகவேலி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்(வயது 25), அப்பகுதியில் உள்ள அபிஷா எனும் பெண்ணை நான்கு மாதங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்குப் பின் சிவக்குமார் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட சண்டையில் அபிஷா சிவக்குமாரிடம் கோபித்து அவர் வேலைக்கு சென்றவுடன் தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். பின்பு சிவக்குமார் வேலை முடிந்து வீடு வந்து பார்த்ததும் தனது மனைவி வீட்டில் இல்லாததை கண்டு அவர் மனமுடைந்து தூக்குப் போட்டுக் கொண்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு சிவக்குமாரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் விரைந்து வந்து சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருமணமாகி 4 மாதங்களே ஆன புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.