மன வேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதி நகர் 4வது குறுக்கு தெரு பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமை தூக்கும் தொழிலாளியான மாரிக்கண்ணன் என்ற மகனும், 1 மகளும் இருக்கின்றனர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மாரியப்பன் இறந்து விட்டதால் மாரிக்கண்ணன் வேலை செய்து தனது குடும்பத்தைப் பராமரித்து வந்துள்ளார். இதனையடுத்து மாரிக்கண்ணன் தனது தங்கையின் திருமணத்திற்காக அதிக கடன்களை வாங்கியுள்ளார். கடந்த சில மாதங்களாகவே மாரிக்கண்ணன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் அவரின் தாயார் இவ்வாறு வேலைக்கு செல்லாமல் இருந்தால் எப்படி கடன்களை செலுத்துவது என்று கூறி திட்டியுள்ளார். இதனால் மாரிக் கண்ணன் மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் மாரிக்கண்ணன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய அவரின் தாயார் தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாரிக்கண்ணனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.