இந்தியாவில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் புள்ளி விவரங்களை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 9.6 கோடி பேரிடம் பாஸ்போர்ட் இருக்கிறது. இது மொத்த மக்கள் தொகையில் 7.2% ஆகும். இன்னும் ஓரிரு மாதங்களில் 10 கோடி பேர் பாஸ்போர்ட் வைத்திருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் அதிகபட்சமாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாஸ்போர்ட் வைத்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் இருக்கிறது. தமிழகத்தை விட 2 மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் 87.9 லட்சம் பேரிடம் மட்டுமே பாஸ்போர்ட் இருக்கிறது.
இந்நிலையில் பாஸ்போர்ட் வைத்திருப்பதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டதோடு, 21 நாட்களாக பாஸ்போர்ட் வழங்குவதற்கான காலம் இருந்த நிலையில் தற்போது 6 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதோடு இந்தியா முழுவதும் 368 பாஸ்போர்ட் மையங்கள் செயல்பட்டு வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வரை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் பாஸ்போர்ட் வழங்கும் பணியை நேரடியாக செய்து வந்த நிலையில், தற்போது டிசிஎஸ் எனப்படும் தனியார் நிறுவனத்தின் பங்களிப்போடு பாஸ்போர்ட் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.